கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கும் கட்சியை தேர்தலின்போது ஆதரிப்போம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கள் இறக்குவதற்கான தடையை நீக்குவதாக திமுக, அதிமுக கட்சிகள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி கள் இறக்க அனுமதி வழங்கும் கோரிக்கையையும் கைவிட்டு விட்டனர். எனவே இந்த தேர்தலில் கள் இறக்க அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே ஆதரவளிப்போம். வரும் தேர்தலில் கள் இயக்கம் போட்டியிடுவது பற்றி வரும் 11-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.