தமிழகம்

மணல் திட்டுக்களில் பனை மரங்களை நடும் தூத்துக்குடி மக்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

மணல் திட்டுக்களை கடல் அரிப்பில் இருந்து காக்க பனை மரங்களை நடும் தூத்துக்குடி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

என் அன்புநிறை நாட்டுமக்களே, நாம் இயற்கையைப் பாதுகாக்கும் போது, இதற்கு பதிலாக இயற்கையும் நம்மைப் பாதுகாத்தளிக்கிறது.
இந்த விஷயத்தை நாம் நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவித்து உணர்ந்திருக்கலாம், இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டினை தமிழ்நாட்டின் மக்கள் பரந்துபட்ட அளவிலே வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

இந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தினுடையது. கரையோரப் பகுதிகள் பல வேளைகளில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதை நாம் அறிவோம்.

தூத்துக்குடியிலும் பல சிறிய தீவுகளும் திட்டுக்களும் இருக்கின்றன, இவை கடலில் மூழ்கும் அபாயம் வலுத்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் மற்றும் வல்லுநர்கள், இந்த இயற்கை அபாயத்திலிருந்து பாதுகாக்க இயற்கையை ஊடகமாகக் கொண்டார்கள்.

இவர்கள் இப்போது இந்த மணல் திட்டுக்களில் பனை மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல்கள் மற்றும் சூறாவளிகளிலும் நிமிர்ந்து நிற்பவை, நிலத்திற்குப் பாதுகாப்பளிப்பவை. இவற்றால் இந்தப் பகுதியைப் பாதுகாக்க ஒரு புதிய நம்பிக்கைக் கீற்று உதயமாகி இருக்கிறது.

நண்பர்களே, இயற்கை நமக்கெல்லாம் எப்போது அபாயத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால், நாம் அதன் சீர்தன்மையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் தூய்மைத் தன்மையை அழிக்கும் போது தான். இயற்கை, நம்மையெல்லாம் ஒரு அன்னையைப் போலப் பராமரிக்கிறாள், நமது உலகிலே புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்புகிறாள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT