தமிழகம்

சென்னையில் தேங்கிக் கிடக்கும் வெள்ளநீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

செய்திப்பிரிவு

சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைவாக வெளியேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், "சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் நான்காவது நாளாக வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நான்கு நாட்களாகியும் சென்னையின் முதன்மை சாலைகளில் மட்டும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மாநகரின் உட்புறச் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

சென்னை மாநகரம் ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக மிதக்கிறது. சென்னையில் இம்மாதம் பெய்துள்ள மழை கடந்த 200 ஆண்டுகளில் இல்லாதது என்பது உண்மை தான். ஆனால், அந்த துயரத்திலிருந்து மக்கள் இன்னும் மீட்கப்படாததை நியாயப்படுத்த முடியாது.

சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைவாக வெளியேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு இனியும் தாமதிக்காமல் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT