தமிழகம்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் அனைவரும் வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்படுவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவரும் வீட்டுத் தனிமையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்று (28.11.2021) தமிழகம் முழுவதும் 12 வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்கின்ற நிலையில், இந்தத் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்ட காலை முதல் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஓர் இயக்கமாக நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு இயக்கமாக தற்பொழுது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 78 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் இன்று 12வது தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

ஏறத்தாழ 50,000 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையை பொறுத்தவரை 2 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கின்ற இலக்குடன் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த முகாமினை உயர்க் கல்வித்துறை அமைச்சர் மல்லிப்பூ காலனியில் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் தென்சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள், டெங்கு காய்ச்சல் முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மழை வெள்ளப்பாதிப்புகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்.

ஒரு சில உலக நாடுகளில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தென் ஆப்ரிக்கா, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவிலிருந்து வரும் அனைவரும் வீட்டு தனிமையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மதுரை ஆகிய சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையங்களில் சுகாதாரத்துறையின் சார்பில் தனித்தனியே தனிஅலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் தவணையாக 77.33 சதவீதம் நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 42.10 சதவீதம் நபர்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் நியமிக்கப்பட்ட சதவீதத்தை தமிழ்நாடு நெருங்கி கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தடுப்பூசி முகாம்கள் ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு இன்று 12வது மெகா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சகள் வேளச்சேரி-தண்டீஸ்வரம் சமுதாயக் கூடம், தரமணி-பாரதிதாசன் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி, பெருங்குடி-நகர்ப்புற சமுதாய நல மையம், துரைப்பாக்கம்-நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், செம்மஞ்சேரி-வணிக வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், அமைச்சர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. பாலம், மடுவின்கரை-மசூதி காலனி-வண்டிக்காரன் சாலை, தரமணி-தந்தை பெரியார் நகர், செம்மஞ்சேரி-சுனாமி குடியிருப்பு பகுதி ஆகியவற்றில் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரினை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எச்.எம்.அசன் மௌலானா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,, அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT