விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
அதற்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்ட பிரச்சாரப் பணிகளை மார்ச் 28-ம் தேதி தொடங்க உள்ளோம். மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.
விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது.மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கத் தயாராகி வருகிறது. பணபலத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போட்டியாக சட்டமன்றத் தேர்தல் இருக்கும்.
இவ்வாறு வைகோ கூறினார்.