நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘மாநாடு’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
முதல்வரின் நடவடிக்கை தேவை
இந்நேரத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை காவல் துறையே உருவாக்குகிறது. இஸ்லாமியர்கள் இதை பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள் என சொல்லப்படுகிறது. இது குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களை ஆதரிக்கக் கூடிய நிலையை உருவாக்குகிறது.
காவல் துறையை இழிவுபடுத்தும் காட்சிகளும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக காவல் துறையை சித்தரிக்கும் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதை அனுமதித்தால் சிறுபான்மை மக்களை காவல் துறையினரின் எதிரிகளாக தீவிரவாதிகளால் ஊக்குவிக்கின்ற போக்கு மேலும் பலமாகும். இதைத் தவிர்க்க சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவோ, படத்தை தடை செய்யவோ வேண்டும்.
மத்திய தணிக்கைக் குழு அனுமதி அளித்திருந்தாலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் படத்தின் இயக்குநர், நடிகர் சிம்பு ஆகியோர் வீடுகளின் முன்பு பாஜக சிறுபான்மை அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.