டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 159 வீடுகள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பரவலாக மழை பெய்துகொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக, நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் மாவட்டத்தில் 123 குடிசை வீடுகள், 36 ஓட்டு வீடுகள் என 159 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, குழிமாத்தூர் பகுதிகளில் 500 ஏக்கர், அம்மாபேட்டை பகுதியில் 500 ஏக்கர், தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் 500 ஏக்கர் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் இருந்து மழைநீரை வடியச் செய்வதற்கு தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில், ஏற்கெனவே பெய்த மழைநீர் வயல்களில் இருந்து வடிவதற்குள், தற்போது கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும், கோட்டூர் ஒன்றியத்தில் காரியமங்கலம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, ஆலத்தூர், அகரவயல், புழுதிக்குடி, நெம்மேலி ஆகிய கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மாதத்துக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் அதே கிராமங்களில் உள்ள தற்காலிக திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இவை மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளதால், இவற்றை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியபோது, “கோட்டூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் முளைவிட்டு சேதம் அடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால், இதற்கு தாமதம் ஆகிறது” என்றனர்.