கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட், சிம்கார்டு வாங்கிய விவகாரம் தொடர்பாக, கோவையில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை புலியகுளம் ஏரிமேட்டைச் சேர்ந்தவர் தினேஷ் (36). பல் மருத்துவர். இவர், இடையர்பாளையத்தில் சிறிய மருத்துவமனை நடத்தி வந்தார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளரான இவரை, கேரள போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, தினேஷிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, தினேஷூக்கு தெரிந்த நபரான, சுங்கம் காமராஜர் வீதியைச் சேர்ந்த டேனிஷ்(32) என்பவரும், மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவில் பதுங்கியிருந்த டேனிஷையும் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களது வீட்டில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே, இவர்களது கூட்டாளியான மாவோயிஸ்ட் ஒருவரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவில் சமீபத்தில் கைது செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை ஆய்வுசெய்தபோது, அதில் பயன்படுத்திய சிம்கார்டு, கோவையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மாவோயிஸ்ட்க்கு சிம்கார்டு கிடைத்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தபோது, கோவைவெள்ளலூரை அடுத்த இடையர்பாளையத்தில் உள்ள ஒருவரது செல்போன் கடையில் வாங்கியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று காலை கோவைக்குவந்தனர்.
வெள்ளலூர் இடையர்பாளையத்தில் உள்ள, சந்தோஷ் என்பவரின் செல்போன் கடையில் சோதனை நடத்தினர்.
கைதான மாவோயிஸ்ட் எந்த முகவரியை கொடுத்து, சிம்கார்டு வாங்கினார் என அதிகாரிகள் கடையின் உரிமையாளரிடம் விசாரித்தனர். மாவோயிஸ்ட் சிம்கார்டு வாங்கும்போது கொடுத்த முகவரியை கடையின் உரிமையாளர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த முகவரி, அதேபகுதியைச் சேர்ந்த பெயின்டரின் பெயரில் இருந்தது. ஆனால், அவருக்கும் சிம்கார்டு வாங்கியதற்கும் தொடர்பில்லை என அந்த பெயின்டரிடம் நடத்திய விசாரணையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்தனர். வேறொருவரின் முகவரியைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கப்பட்டதை உறுதிசெய்தனர்.
இந்த முகவரி மாவோயிஸ்ட்க்கு எப்படி கிடைத்தது என்பது போன்ற விவரங்கள் தொடர்பாகவும், சிம்கார்டு விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்கின்றனர். இந்தசோதனை மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.