தூத்துக்குடி அருகே ரூ.1.10 கோடி மதிப்பிலான முந்திரி பருப்புடன், கன்டெய்னர் லாரியை கடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து நேற்று முன்தினம் ரூ.1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்றது. லாரியை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி(40) என்பவர் ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே வந்தபோது, அந்த லாரியை கார் ஒன்று வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய நபர்கள், லாரி ஓட்டுநர் ஹரியை தாக்கி, அவரையும், லாரியையும் கடத்திச் சென்றனர்.
உரிய நேரத்தில் லாரி வந்துசேராததால் இதுபற்றி, தூத்துக்குடியில் உள்ள லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துகுமார், தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ், புதுக்கோட்டை ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அந்த லாரி மதுரை நெடுஞ்சாலையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த சுங்கச்சாவடிகளில் உள்ள கேமராக்களை ஆய்வுசெய்தபடி சென்ற போலீஸார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் காக்கநேரி என்றஇடத்தில் கன்டெய்னர் லாரி மற்றும்காரை மடக்கிப் பிடித்தனர்.
லாரி மற்றும் காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்(39), பிரையன்ட் நகரைச்சேர்ந்த சக்திவேல் மகன் விஷ்ணுபெருமாள்(26), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து(30), மட்டக்கடை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (36), முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி(21), முறப்பநாடு முத்துவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்முருகன்(35), பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் தெருவைச் சேர்ந்த துரைகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) எனத் தெரியவந்தது. முந்திரி பருப்பை கடத்தி, சேலம் பகுதிக்கு கொண்டுசென்று விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். ரூ. 1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு, கன்டெய்னர் லாரி, கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.