கோவையில் அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே நிகழ்ந்த தேர்தல் மோதல் வழக்கில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட 7 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், அதிமுகசார்பில் அம்மன் அர்ஜூனனும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்ற மறுநாள், வானதி சீனிவாசன் பெரியகடை வீதி அருகேயுள்ள கோயிலுக்கு சென்றபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில், பாஜகவினர் தன்னைத்தாக்கியதாக வானதி சீனிவாசன்உட்பட 7 பேர் மீது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்ஆதிநாராயணன், பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். கோவை 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இந்த வழக்கில் நேற்றுதீர்ப்பு அளிக்கப்பட்டது. வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம், பாபு ஆகிய 7 பேரை விடுதலை செய்து நீதிபதி அப்துல் ரகுமான் உத்தரவிட்டார்.