சென்னையில் தொடரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரை சென்னை விமான நிலையத்தில் 7 செமீ, கிண்டி, எம்ஜிஆர் நகர் ஆகிய இடங்களில் 6 செமீ, மயிலாப்பூர், தரமணி, சோழிங்கநல்லூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பகல் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் தீவிரத்தைக் கருதி சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தொடர் மழை காரணமாக புளியந்தோப்பு, திரு.வி.க.நகர். தியாகராயநகர், அண்ணா சாலை ரிச்சி தெரு, எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம், உயர் நீதிமன்றம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன், ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பேருந்துகள் நிறுத்தம்
மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்தது. ராம்நகர் பகுதியில் கனமழையால் வேளச்சேரி-மடிப்பாக்கம் பிரதான சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. அதனால் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மடிப்பாக்கம் ஏரியும் நிரம்பும் தருவாயில் இருப்பதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.