திருப்போரூர் ஒன்றியம் படூர் மற்றும் புதுப்பாக்கம் இடையே 53 ஹெக்டேர் பரப்பளவில் ஈசா ஏரி அமைந்துள்ளது. தற்போது நிரம்பியுள்ள இந்த ஏரியின் உபரிநீர் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் முறையாக வெளியேற முடியாமல், படூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக, ராதாகிருஷ்ணன் தெருவில் சாலையை பெயர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏரியின் உபரிநீர் ஓஎம்ஆர் சாலையோரம் உள்ள கால்வாயை அடைந்து கழுவேலி மூலம் பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து வருகிறது.
இதுகுறித்து படூர் கிராம மக்கள் கூறும்போது, "ஆக்கிரமிப்புகளால் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கால்வாய் இருந்ததற்கான அடையாளமே இல்லை.
எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.