தமிழகம்

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குக் கூடுதல் நிதி: அன்புமணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

''மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கெனவே இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.70,000 கோடியை விட ரூ.19,888 கோடி அதிகமாக செலவழிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் ஒதுக்கீடும் போதுமானதல்ல.

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தேவைகளை ஆய்வு செய்து இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வரும் மார்ச் மாதம் வரை தமிழகத்திற்கான நிதித் தேவையைக் கணக்கிட்டு மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற வேண்டும்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் பணி நாட்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன. அவற்றை மத்திய அரசு ஆய்வு செய்து அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க முன்வர வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT