மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் எம்.பி. ஜோதிமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய படம். 
தமிழகம்

தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றார் ஜோதிமணி

க.ராதாகிருஷ்ணன்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்த கரூர் எம்.பி. ஜோதிமணி, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் நடத்தக் கோரி ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் முகாம்களை ஏற்பாடு செய்யாமல் என்னைப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார் எனக் கூறி ஆட்சியரைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதுகுறித்துத் தகவலறிந்த ஆட்சியர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து விளக்கம் தெரிவித்தும், எம்.பி. ஜோதிமணி சமாதானம் அடையாததால் போராட்டத்தைத் தொடர்ந்தார். மேலும் முகாம் நடத்துவது தொடர்பாகக் கடிதம் அளிக்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக ஜோதிமணி தெரிவித்தார். இரவு முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் படுத்துறங்கி விடிய விடிய உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டார்.

2-வது நாளான இன்றும் (நவ.26-ம் தேதி) எம்.பி. ஜோதிமணி போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.பி.ஜோதிமணியிடம் உறுதியளித்தார். இதையடுத்து மதியம் 1.50 மணிக்குத் தனது தொடர் போராட்டத்தை ஜோதிமணி வாபஸ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை உடனடியாக நடத்த வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT