கரோனா காலத்தில் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 6 முக்கிய ரயில் நிலையங்களில் ரூ.50 ஆகஉயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காலத்தில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் ரூ.50 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது.
மீண்டும் பழைய கட்டணம்
இதற்கிடையே, கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு தற்போது விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணமும் மீண்டும் பழையமுறைப்படி ரூ.10 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா பரவலைத்தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட்டது. தற்போது, கரோனாபாதிப்பு குறைந்துள்ளதால், நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் பழைய முறைப்படியே நடைமேடை கட்டணம் வசூலிக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.