தமிழகம்

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு நேரடி விமான சேவைக்கு ஒப்பந்தம்: விரைவில் மேற்கொள்ள மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

செய்திப்பிரிவு

சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு நேரடிவிமான சேவைக்கான தற்காலிக கரோனா கால விமான போக்குவரத்து ஏற்பாட்டுக்கான ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய விமானபோக்குவரத்துத் துறை அமைச்

சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பயணிகளுக்கு சிரமம்

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இதர பயணிகள், இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்துக்கு வர நேரடி விமான சேவையில்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்கள் துபாய், தோகா மற்றும் கொழும்பு வழியாக மாற்றுப்பாதையில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அதிக விமான கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் நிதிச்சுமை ஏற்படுகிறது. அத்துடன் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் கரோனா கால விமான போக்குவரத்துக்கான தற்காலிக விமான போக்குவரத்து ஏற்பாடுகளுக்கான ஒப்பந்தத்தை மத்தியசிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்து கொள்ளாததால், விமான பயண வணிகமானது கத்தார் ஏர்வேஸ், எமிரெட்ஸ் மற்றும் லங்கன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கே கிடைக்கிறது. நம் நாட்டு விமானநிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை.

பிரச்சினைகளுக்குத் தீர்வு

எனவே, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் விரைவில் தற்காலிக விமான போக்குவரத்து ஏற்பாடுகளுக்கான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், விமானபயணங்களின்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT