மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்தப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் வார்டை நேற்று திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. இதுகுறித்துஅரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
மதுரை மத்திய சிறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் புகாரில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அதுகுறித்து தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும்.
தமிழகத்தில் சிறை பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சிறைக்கு அழைத்துவரப்படும் கைதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதோடு, கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர்கவிதா ராமு, எம்எல்ஏ வை.முத்துராஜா, மருத்துவக்க கல்லூரி முதல்வர் எம்.பூவதி, கோட்டாட்சியர் அபிநயா, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராஜ்மோகன், நிலையமருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தடுமாறிய அமைச்சர்
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘கைதிகளின் மீது அக்கறை கொண்டுள்ள முதல்வர் புரட்சித் தலைவர் (எம்ஜிஆர்)” என்று கூறினார். பின்னர், சிறிய தடுமாற்றத்துக்குப் பிறகு, “முதல்வர், கழகத் தலைவர் தளபதியின் தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாட்டை எடுத்துக்காட்டுவதாக சிறைவாசிகளுக்கான தனி சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது’’ என்றார். அமைச்சர் ரகுபதி அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.