தமிழகம்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்

செய்திப்பிரிவு

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில்டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுஉள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவது பெற்றோரை கவலை அடையச் செய்துள்ளது. அதிகரித்துள்ள டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் எனபெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இது அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகவும், இந்த ஆண்டுடெங்கு பரவல் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 500-க்கும் மேற்பட்டோர் டெங்கு தடுப்பு களப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணிகளை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதிகளில் கூட்டு துப்புரவு, கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துதல், வீடுகளில் புகை மருந்து அடித்தல், அபேட் கொசு மருந்து தெளித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று காய்ச்சலால் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா எனக் கணக்கெடுத்து வருகின்றனர். மக்கள் தங்கள்வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களை சுத்தமாக வைக்க வேண்டும். அவற்றை வாரத்தில் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து ஒரு நாள் முழுமையாக காய வைத்து, அதன் பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும். கொசு புழுக்கள் உள்ளே புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

வீடுகளில் அடியில் இருக்கும் தொட்டி மற்றும் மாடியில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவை மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்களின் பின்புறம் இருக்கும் டிரேயில் தேங்கும் தண்ணீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு முழு உடலையும் மறைக்கும் வகையில் ஆடை அணிவிக்க வேண்டும். டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT