நூல் விலை உயர்வைக் குறைக்கக்கோரி நாளை திருப்பூரில் நடைபெறும் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூ. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் தொழில்களும், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட துணி நூல் துறைத் தொழில்கள் அனைத்தும் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. நூல் விலை உயர்வைக் குறைக்கக்கோரி திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை (26.11.2021) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்துத் தொழில்துறையினரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியக் கம்யூ. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் தொழில்களும், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட துணி நூல் துறைத் தொழில்கள் அனைத்தும் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி மற்றும் நூல்களும் வரம்பற்ற முறையில் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டு துணி நூல் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் சீன எதிர்ப்பு வியாபார யுத்தம் காரணமாகவும் நெருக்கடி தீவிரமாகி வருகிறது. இது தொடர்பாக தலையிட்டு தீர்வு காண வேண்டிய பாஜக ஒன்றிய அரசு செயலற்று கிடக்கிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் தேசிய பஞ்சாலையினை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தி வருவதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
இது தொடர்பாக கடந்த 22.11.2021 திருப்பூரில் கூடிய அனைத்துத் தொழில்துறையினர் கூட்டம் நாளை (26.11.2021) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இப் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, நியாயமான விலையில் நூல்கள் தட்டுபாடின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. திருப்பூர் தொழிலையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடைபெறும் போராட்டத்தை அனைத்துப் பகுதி மக்களும் ஆதரித்து பங்கேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.