படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு மோடி தலைமையை ஏற்றுக்கொள்கிறேன்: பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பேட்டி

இரா.கார்த்திகேயன்

ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு மோடி தலைமையை ஏற்றுக்கொள்கிறேன் என்று சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் காரைக்குடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சோழன் சி.த.பழனிசாமி ஆகியோர் நேற்று ( நவ. 24) பாஜகவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நிறுவனர் டி.ராஜசேகர், சென்னை புறநகர் மாவட்ட அதிமுக ஐடிபிரிவு தலைவர் பிரவீன்குமார், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில், தமிழகப் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, சி.டி.ரவி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் இருந்தனர்.

பாஜகவில் இணைந்த மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“வல்லரசு நாடாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில், பிரதமர் மோடி மீது பற்றுள்ள காரணத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன். அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க பிரதமர் மோடி காரணமாக இருந்து வருகிறார்.

அதிமுக ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக அமைய மோடி காரணமாக இருந்துள்ளார். ஜல்லிக்கட்டு, முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட விவகாரங்களில் மோடி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். இவரின் தலைமையை ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT