மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிப் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"கரோனாவின் கோரத் தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் கடந்த 19 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்தில் நீண்ட தூரம் பயணம் செய்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு என இலவச பஸ் பாஸ் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் "ஸ்மார்ட் கார்டாக" வழங்கி வருகிறது.
இருப்பினும் காலை நேரத்தில் அலுவலகப் பணியாளர்களும் பேருந்து சேவையைப் பயன்படுத்துவதால் கூட்ட நெரிசல் அதிகப்படியாகக் காணப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரிப்பதால் படிகளில் தொங்கியபடியும் கூரைகளில் ஏறிக் கொண்டும், உயிர் பயம் இல்லாமல் சர்க்கஸ் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ நாள்தோறும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பள்ளிகளுக்குச் செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்களிடையே பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தையொட்டிய அண்டை மாநிலங்களில் பள்ளி மாணவ மாணவிகளைப் பள்ளிகளுக்குச் செல்ல, குறிப்பிட்ட நேரத்தில் தனிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மாணவிகளுக்கு மட்டும் தனிப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. அதுபோன்று தமிழகத்திலும் பள்ளி மாணவ – மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் மாணவிகளை இதுபோன்ற குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் பயிலும் மாணவிகளுக்கு எனத் தனியாக சிறப்புப் பேருந்துகளைக் குறிப்பிட்ட நேரங்களில் இயக்க வேண்டும்."
இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.