பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி யிருப்பதாவது:
புத்தகங்கள் மீதும், வாசிப்பின்மீதும் கருணாநிதி வாழ்நாள் முழுவதும் தீராப்பற்று கொண்டிருந்தார். 2010-ல் சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா நூற்றாண்டுநூலகத்தை அவர் திறந்துவைத்தார். மாணவர்கள், கல்வியாளர் கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் கலங்கரை விளக்கமாக அந்நூலகம் திகழ்கிறது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும் இத்தகைய அரிய வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் 3-ம் தேதி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதை செயல்படுத்தும் வகையில், பொதுநூலக இயக்குநர் அரசுக்கு கருத்து அனுப்பியுள்ளார். அக்கருத்துருவை ஏற்று, சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் கலைஞர் நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.99 கோடி, இந்நூலகத்துக்கு தேவையான நூல்கள், மின்நூல்கள், இணையவழிப் பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ரூ.10 கோடி, தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கு ரூ.5 கோடி என மொத்தம் ரூ.114 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.