அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைப் பார்த்து கைகூப்பிய ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி. படங்கள்: ம.பிரபு 
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசாரமான விவாதம்

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை ஒருங்கிணைப் பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகுறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் பேசினர். அப்போது குறுக்கிட்ட முன்னாள் எம்பியும், அதிமுக அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா, பாஜகவுடனான கூட்டணி குறித்து சில கருத்துகளை முன்வைத்ததாகத் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை அன்வர்ராஜா ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் அன்வர் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது முன்னாள் அமைச்சர்கள் தங்களுடன் இணைந்து செயல்படவில்லை என்று நிர்வாகிகள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பினர். இதனால் இருதரப்புக்குமிடையே காரசாரமாக விவாதம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தொண்டர்கள் பிரிந்துள்ளனர். அதனை ஒருங்கிணைத்தால்தான் தேர்தல் வெற்றியைப் பெற முடியும் எனப் பேசியுள்ளார்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல், உறுப்பினர் அட்டை விநியோகம், பொன்விழா நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து ஆலோசனை செய்யப்பட்டது.

முன்னதாக மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேலுக்கு எதிராக இலத்தூர் ஒன்றிய அதிமுகவினர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேதா இல்ல விவகாரம்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக அரசு தேர்தல் விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மாநில தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாக வைத்துக்கொண்டு, அட்டூழியங்களை செய்து வருகிறது. அதை எதிர்கொண்டு, தேர்தலில் முழு வெற்றியைப் பெறத் தேவையான கருத்துகள் பகிரப்பட்டன.

வேதா இல்லத்தை நினைவிடமாக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான மேல் நடவடிக்கை குறித்தும், அரசு எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தும் உரிய நேரத்தில் அதிமுக தலைமை முடிவெடுக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT