ஆவடி, காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகத்தை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் செலவில், அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழில் நுட்பவியல், கணிதம், வானவியல் போன்றவற்றில் புதுமைகளை படைக்கும் திறன்களை வளர்க்கஉதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆய்வகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் நாசர் தெரிவித்ததாவது: நான் படித்த இப்பள்ளியில் நவீன வசதியுடன்கூடிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வகத்தில் உள்ள மின்னணு உபகரணங்கள், ரோபாடிக்ஸ், சென்சார்கள், 3-டி பிரின்டர், டெலஸ்கோப், தொடுதிரை, கணினிகள் உள்ளிட்டவை மாணவர்களின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு பதிலளித்து கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர்(ஆவடி) ராதாகிருஷ்ணன் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.