தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பாதத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் இன்று கன்னியாகுமரி வந்திருந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானநிலையம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வரவேற்றார்.
பின்னர் அங்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் நலவாரிய உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து மாலையில் படகு மூலம் கடல்நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு சென்ற அவர், திருவள்ளுவர் சிலை பாதத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அவர், விவேகானந்தர் மண்டபம், தியான மண்டபம்,பகவதியம்மன் கால் பாதம் போன்றவற்றை பார்வையிட்டார். அதன் பின்னர் படகு மூலம் கரைதிரும்பினார். நாளை விவேகானந்தா கேந்திரா செல்லும் அவர் அங்குள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்கிறார். பின்னர் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலுக்கு செல்ல இருக்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.