தமிழகம்

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ: அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய மோடி காரணம் எனப் புகழாரம்

செய்திப்பிரிவு

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறக்க மோடி காரணம் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், சென்னை புறநகர் மாவட்ட அதிமுக ஐ.டி. பிரிவு தலைவர் பிரவீன் குமார், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் துரை பாண்டி, கடலூர் அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர் பொதுச்செயலாளர் ராஜசேகர், சிவசேனா கட்சி மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்படப் பலர் இன்று தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மீது பற்றுள்ள காரணத்தாலும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் பாஜக மீது பற்று வைத்துள்ளதாலும் கட்சியில் இணைந்துள்ளேன்.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க மோடி காரணமாக இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக அமைய மோடி காரணமாக இருந்துள்ளார். ஜல்லிக்கட்டு, முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட விவகாரங்களில் மோடி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். இவரின் தலைமையை ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT