மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், மத்தியக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.
சென்னை, தென் மாவட்டங்கள், கடலூர் என மழையால் பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கு மத்தியக் குழுவினர் சென்று ஆய்வு நடத்தினர். குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் என அனைத்தையும் மத்தியக் குழு ஆய்வு செய்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தது.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மத்தியக் குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டதற்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இன்று (நவ. 24) ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக, வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடம் ரூ.2,629.29 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில் ரூ.549.63 கோடியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.