தமிழகம்

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய மாணவர்கள் மறியல்

ஜி.ராதாகிருஷ்ணன்

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் மாணவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூரை அருகே வசித்த தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி கடந்த 19ம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துக்கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுதொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்பு சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நேற்று ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றது.

காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இன்று (நவ. 24ம் தேதி) காலை மாணவி படித்த தனியார் பள்ளி பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியலில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 78 மாணவ, மாணவிகளை கரூர் நகர போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். கரூர் அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பாக மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மதியம் 12 மணியளவில் மாணவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இரு வேறு இடங்களில் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT