தமிழகம்

கும்பகோணம் அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகர்(47). இவருக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர். 2014-ல் திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், நடவு இயந்திரம் வாங்க ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். கடன் நிலுவையை செலுத்துமாறு வங்கி அலுவலர்கள் தொலைபேசி மூலம் நெருக்கடி கொடுத்தார்களாம். மேலும், அவர் கந்து வட்டிக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தனசேகர், நேற்று முன்தினம் இரவு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். வயலில் மயங்கிய நிலையில் கிடந்த தனசேகரை உறவினர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து, அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் டிஎஸ்பி சிவபாஸ்கர் மற்றும் போலீஸார் நேற்று கொத்தங்குடி கிராமத்துக்குச் சென்று, விவசாயி தனசேகர் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுவாமிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT