மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.150-ஐக் கடந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த தொடர்மழையின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், கோயம்பேடு மொத்தவியாபார சந்தையில் கடந்த வாரம்ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரைவிற்பனையான தக்காளி, சில தினங்களுக்கு முன்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதனால், சில்லரை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், சில்லரை விற்பனை கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனையானது. தக்காளி விலை ரூ.150-ஐக் கடந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது,
‘‘ஆந்திராவில் பெய்த தொடர்மழையின் காரணமாக விவசாயிகள் விளைவித்த 90 சதவீத தக்காளிச் செடிகள் சேதமடைந்து விட்டன. இதனால், கோயம்பேடு சந்தைக்கு சாதாரணமாக 80 லாரிகளில் வரும்தக்காளி 30 லாரிகளில்தான் வருகிறது. மேலும், விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்துதான் மொத்த வியாபாரிகள் வாங்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து அதிகரித்தால்தான் விலை குறையும்’’ என்றார்.
இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் ரூ.90-ல் இருந்து ரூ.100, வெங்காயம் ரூ.30-ல் இருந்து ரூ.40, உருளைக் கிழங்கு ரூ.35-ல் இருந்து ரூ.40, கத்திரிக்காய் ரூ.60-ல் இருந்துரூ.80, இஞ்சி ரூ.25-ல் இருந்து ரூ.30,புடலங்காய் ரூ.35-ல் இருந்து ரூ.40,கேரட் ரூ.60-ல் இருந்து ரூ.70 என பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளன.
பொதுவாக, கோயம்பேடு சந்தைக்கு தினமும் 450 லாரிகளில்காய்கறிகள் வருவது வழக்கம். மழை காரணமாக தற்போது 250 லாரிகள் மட்டுமே வருவதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.