கோப்புப்படம் 
தமிழகம்

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

செய்திப்பிரிவு

இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்பதால், டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில்தமிழகக் கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்று (நவ.24) திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். பிற தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

25-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.

சென்னையில் மிக கனமழை

26, 27-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழைபெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைபெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT