தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை: இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் அதிக இடங்களைக் கைப்பற்ற அதிமுக முனைப்போடு உள்ளது. எனவே, தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

வழக்கமாக அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் ஆண்டின் இறுதியில் நடத்தப்படும்.ஆனால், 2021 பேரவைத் தேர்தலைகருத்தில் கொண்டு, அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜன.9-ம் தேதி நடத்தப்பட்டது. வரும் டிசம்பரில் 2-வது செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

ஆனால், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவின் காரணமாக அந்த பதவி காலியாக உள்ளதால், செயற்குழுவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அப்பதவிக்குத் தகுதியான நபரை தேர்வு செய்வது தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குகள் குறித்தும்இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அதேபோல, அதிமுக பொன்விழாவின்போது, தி.நகரில் எம்ஜிஆர் வாழ்ந்த இல்லத்தில் சசிகலா கொடியேற்றினார். அப்போது, நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், கழகப் பொதுச் செயலாளர் சசிகலா எனபொறிக்கப்பட்டிருந்தது. சமீபகாலமாகவே, கழகப் பொதுச் செயலாளர் என்று பெயரிலேயே சசிகலாஅறிக்கை வெளியிட்டு வருகிறார்.இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT