தமிழகம்

பழங்குடியினர் பெருமை வாரத்தை முன்னிட்டு மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்: ஏழைகளுக்கு உதவ வேண்டும் என அறிவுரை

செய்திப்பிரிவு

பழங்குடியினர் பெருமை வாரத்தைமுன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பள்ளிகளின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பழங்குடியினத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பகவான்பிர்சா முண்டாவின் 146-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் அவரைப்போன்ற தலைவர்களின் பங்களிப்புகள், தியாகங்களை நினைவுகூரும் வகையில் பழங்குடியினர் பெருமை வாரம் கொண்டாடப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிர்சா முண்டா படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 8 ஏகலைவா மாதிரிஉண்டி உறைவிடப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது கல்வி, பணி மேம்பாடு, தேசத்தை கட்டமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில்அளித்து ஆளுநர் ரவி பேசியதாவது:

மாணவர்கள் உயர்ந்த சிந்தனையுடன் பெரிய கனவுகள் காண வேண்டும். கனவுகளை நனவாக்க கடினமாக உழைக்க வேண்டும். சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும். சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களை வகுத்துக்கொண்டு, தடைகளை தாண்டிச் செல்ல வேண்டும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆலமர விதை போன்றவர்கள். அவர்களுக்கு சரியான முறையில் ஊக்கம் அளிக்கும்போது, அவர்கள் மேன்மை பெற்று புகழின் உச்சத்தை எட்டுவார்கள். மாணவர்களுக்கு உத்வேகம் தரும்ஆதாரமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்து விளக்கினர். பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை ஆளுநர் வழங்க, மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

பழங்குடியினர் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து மாநிலபழங்குடியினர் நலத் துறை இயக்குநர் வி.சி.ராகுல் எடுத்துரைத்தார்.

மாணவர்களுடன் மதிய உணவு

பின்னர், மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுடன் ஆளுநர் மதியஉணவு அருந்தினார். பிறகு, ஆளுநர் மாளிகையை மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர். கோளரங்கம் உள்ளிட்ட பகுதிகளையும் பார்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT