தமிழகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை கடத்தி பணம் பறித்ததாக பிஹாரைச் சேர்ந்த 6 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை கடத்திச் சென்று, பணம் பறித்த வழக்கில் பிஹாரைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பூடன் பகுடி(21). இவர், சென்னை தாம்பரம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் வாங்குவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் விற்பனை இல்லை என்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு கும்பல் பூடன் பகுடியை அணுகி, தாங்கள் டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். சேப்பாக்கம் அக்பர் தெருவுக்கு அழைத்துச் சென்ற அக்கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கி, அவரிடமிருந்த பணம், செல்போனைப் பறித்துச் சென்றுள்ளது.

பின்னர், இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸில் பூடன் பகுடி புகார் செய்தார். ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, பிஹார் மாநிலம், கவுன்காஹலிதியைச் சேர்ந்த அமன்குமார்(23), அவரது கூட்டாளிகள் ரபிகுமார் (22), சாஞ்சி மஹ்தோர் (36), மோஹித்குமார் (21), ராஜேஷ்குமார் (26), சுஷில்குமார் (22) ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 19 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

SCROLL FOR NEXT