தமிழகம்

சேலம் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சேலம் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், தாதகாப்பட்டி கிராமம், பாண்டுரங்கன் விட்டல் தெருவில் கோபி என்பவரது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் அப்பகுதியியைச் சேர்ந்த (1) .பத்மநாபன் (2) தேவி (3) கார்த்திக் ராம் (4) எல்லம்மாள் மற்றும் (5) ராஜலட்சுமி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கருங்கல்பட்டியில் அடுத்தடுத்த வீடுகள் நிறைந்த இடத்தில், வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

இதில் இரு மாடி வீடுகள் இடிந்து விழுந்தன. அருகில் இருந்த சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனிடையே, வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலர் சிக்கினர்.

தகவலறிந்து தீயணைப்பு படையினர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT