தமிழகம்

கவுன்சிலர், மகன் கொலை வழக்கு: அதிமுக நகரச் செயலாளர் உட்பட 8 பேர் கைது

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர், அவரது மகன் கொலை வழக்கில் அதிமுக நகரச் செயலாளர் உட்பட 8 பேரை சிவகங்கை தாலுகா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டர சன்கோட்டையில் மூவேந்தர் தெரு வைச் சேர்ந்தவர் நாகராஜ் (49). இவர், 12-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார். இவரது மகன் விக்னேஷ் (23). இவர்களை நேற்று முன்தினம் காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதைத் தடுக்க வந்த நாகராஜின் மனைவி உஷாராணிக்கும் வெட்டு விழுந்தது.

இக்கொலை வழக்கு குறித்து சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் பொன்.ரகு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக இக்கொலை நடைபெற்றதாக சிவகங்கை தாலுகா போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதில் தொடர்புடையதாக நாட்டரசன்கோட்டை நக்கீரர் தெருவைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் ரவி என்ற ரவிச்சந்திரன் (51), இதே ஊரைச் சேர்ந்த கண்மணி என்ற கண்மணி பாண்டியன் (35), கவி என்ற கவி ராஜ் (35), நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த பாண்டிகுமார் (32), ரஞ்சித் (23), மதன் (24), கவுரிபட்டி யைச் சேர்ந்த இலங்கை அகதி அருள் (25), மணிவேல்கண் ணன் (24), காட்டுப்பூச்சி என்ற ஆறுமுகம் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் தலைமறைவான கவிராஜ் தவிர 8 பேரையும் சிவகங்கை தாலுகா போலீஸார் நேற்று கைது செய்தனர். கவிராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT