தமிழகம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 25, 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25, 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக 23-ம் தேதி மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இதர தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழையும் இதர வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

24-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இதர தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

25, 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

22-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் தென்பரநாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கில்துறைப்பட்டு ஆகிய இடங்களில் தலா 4 செமீ, செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம், சேலம் மாவட்டம் எடப்பாடி, நீலகிரி மாவட்டம் பந்தலூர்,திருவள்ளூர் மாவட்டம் ஆவடி,தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT