திருவாரூர் மாவட்டத்தில், அண்மைக்காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீடாமங்கலம் கடைவீதியில் நவ.10-ம் தேதி அன்று பட்டப்பகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதேபோல, காட்டூரில் நவ.14 அன்று ரவுடி குமரேசன் கொலை செய்யப்பட்டார். இருகொலை சம்பவங்களும் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளன.
மேலும், மே 5-ம் தேதி கிடாரங்கொண்டானில் குடும்பத் தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி சரக்கு வாகனத்தை ஏற்றி ஜெயபாரதி என்பவர் கொலை செய்யப்பட்டார். ஜூன் 19-ம் தேதி கூடூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள், அக்கட்டிட உரிமையாளர் தமிழரசனை கொலை செய்தனர். ஜூலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஆரியலூரில் வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி ரஜினி பாண்டியன் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டார்.
ஆகஸ்ட்டில் மன்னார்குடியில் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட தகராறால் சக நண்பரை இளைஞர்கள் கொலை செய்தனர். இதுபோல, கடந்த 6 மாதங்களில் முன்விரோதம், குடும்பப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களால் 15-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும், திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில், மகளின் காதலனை வீடு தேடிச் சென்று பெற்றோர் அரிவாளால் வெட்டினர். திருவாரூர் நகைக்கடையில் உரிமையாளர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு, 5 பவுன் சங்கிலியை தம்பதியர் பறித்துச் சென்றனர். மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி, தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை போலீஸார் பிடித்துவிட்டனர். ஆனாலும், குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலங்கோட்டை இளங்கோவன் கூறியதாவது: குற்றங்கள் நிகழும்போது போலீஸார் காட்டும் வேகம் மற்ற நாட்களில் இருப்பதில்லை. அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், விழாக்கள் போன்றவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பது, காவல் நிலையங்களில் உள்ள நீதிமன்ற வழக்குகளைக் குறைப்பது போன்றவற்றில் போலீஸார் கவனம் செலுத்த தொடங்கிவிடுகின்றனர். இதனால், போலீஸாரின் தொடர் கண்காணிப்பு குறித்த அச்சம் குற்றவாளிகளிடம் குறைந்துவிட்டது. இதுவும் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைப்பின் பொதுச் செயலாளர் ரமேஷ் கூறியதாவது: போதைப் பழக்கம் அதிகரித்திருப்பது குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படையாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சாலையோரத்தில் நின்று மது குடிப்போரை போலீஸார் கண்டுகொள்வதில்லை. கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்தி, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை போலீஸார் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து திருவாரூர் எஸ்பி விஜயகுமார் கூறியதாவது: நான் இங்கு பொறுப்பேற்ற 2 மாத காலத்துக்குள் 50 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வழக்குகளிலும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர். கொலை, கொள்ளை, அடிதடி சம்பவங்கள் மக்களின் மனநிலையைப் பொறுத்தே நிகழ்கின்றன. முன்பகை, பழிக்குப் பழி போன்ற காரணங்களால் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் கொலையில் முடிவடைவதும் அதிகரித்துள்ளது.
எனினும், அனைத்து குற்றங்களையும் கண்காணித்து, தடுப்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.