மணிகண்டன் 
தமிழகம்

கீரனூர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் ஆடு திருடிய 2 சிறுவர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களை மடக்கிப் பிடித்தபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் எஸ்.பூமிநாதன் (50). இவரும்,தலைமைக் காவலர் சித்திரவேலுவும் நேற்று முன்தினம் அதிகாலை பூலாங்குடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஆடுடன் வந்த 3 பேரை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதனும், சித்திரவேலுவும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டிச் சென்றனர்.

திருச்சி மாவட்ட எல்லையைக் கடந்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால், அதற்கு மேல் செல்ல முடியாமல் பூமிநாதனிடம் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை மடக்கிப் பிடித்த பூமிநாதன், சித்திரவேலை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு கூறியுள்ளார். இருட்டில் அவர் வழி தடுமாறி சென்றதால் உடனே அவரால் செல்ல முடியவில்லை.

இதையடுத்து, தன்னுடன் பணிபுரியும் கீரனூரைச் சேர்ந்த மற்றொரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகருக்கு தகவல் தெரிவித்த பூமிநாதன், அவரை அங்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சேகர் வந்தபோது, பூமிநாதனை அவர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த ஐஜி (பொறுப்பு) க.கார்த்திகேயன், டிஐஜி சரவண சுந்தர், எஸ்பி சுஜித்குமார் மற்றும் கீரனூர் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர்.

சிக்கியது எப்படி?

இந்தக் கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். அதில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகரை பூமிநாதன் தொடர்பு கொண்டபோது, ஆடு திருடியதாக, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூரைச் சேர்ந்தவர்களை, தான் பிடித்து வைத்திருப்பதாக கூறியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடைய தோகூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன்(19) மற்றும் அவரது உறவினர்களான சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை நேற்று கைது செய்தனர்.

பின்னர், மணிகண்டன் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.பிச்சைராஜன் முன்னிலையிலும், சிறார்கள் 2 பேரும் புதுக்கோட்டை சிறார் நீதிக் குழுமத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆதாரங்களுடன் கைது: டிஐஜி

இதுகுறித்து கீரனூரில் செய்தியாளர்களிடம் டிஐஜி ஏ.சரவண சுந்தர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலைய எல்லைக்குள் ஆடு திருடி கொண்டு வரும்போது, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன் மடக்கி பிடித்ததால், அவரை தன்னுடன் வந்த 2 சிறுவர்களுடன் சேர்ந்துதாக்கியதாக மணிகண்டன் தனதுவாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அப்போது மணிகண்டன் மதுபோதையில் இருந்து உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

செல்போன் தொடர்புகளை வைத்து, முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு இன்று (நவ.23) திருச்சி வந்து பூமிநாதனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த தனிப்படையினரையும் அவர் சந்திக்கிறார்.

சிறார் குற்றங்களைக் குறைக்கும் வகையில் திருச்சி சரகத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. தொடர்ந்து, இரவு நேரரோந்து பணிகளில் போலீஸார் பாதுகாப்பாக ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார். அப்போது, புதுக்கோட்டை கூடுதல்எஸ்பி கீதா, கீரனூர் டிஎஸ்பிசிவசுப்பிரமணியன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கமலவேணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT