தமிழகம்

புலி நடமாட்டமுள்ள பகுதியில் பொதுத் தேர்வு எழுத போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் மாணவர்கள்

ஆர்.டி.சிவசங்கர்

புலி நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களை, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வுட்பிரையர் எஸ்டேட்டில், கடந்த 11-ம் தேதி வட மாநிலத் தொழிலாளி மது ஓரனை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து, புலி நடமாட்டத்தை கண்காணிக்க 48 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 10 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

புலியின் உருவம் கேமராக்களில் பதிவானதால், நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு, அதனை கண்காணிக்க மரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலி பிடிபடாமல் இருப்பதால், கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில், கரிசனக்கொல்லி குறும்பரின பழங்குடி மாணவர்கள், எந்தவித சலனமுமின்றி பொதுத் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தக் கிராமத்தில் 6 மாணவிகள், ஒரு மாணவர் என 7 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறும்போது, “புலி நடமாட்டம் உள்ள எஸ்டேட் அருகே இந்தக் கிராமம் உள்ளதால், போலீஸ் பாதுகாப்புடன் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நேற்று முன்தினம் முதல் அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களை பெற்றோர் ஒருங்கிணைக்கின்றனர். அங்கு வரும் போலீஸ் வாகனம், அவர்களை பள்ளிக்கு ஏற்றிச் செல்வதுடன், மீண்டும் மாலை வீட்டுக்கு கொண்டுவிடுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியதால், போலீஸ் பாதுகாப்புடன் மாணவர்கள் தங்கள் கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று நேற்று தேர்வு எழுதினர்.

இதுகுறித்து தேவர்சோலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் உண்ணிகிருஷ்ணன் கூறும்போது, “புலி நடமாட்டம் உள்ளவரை, கரிசனக்கொல்லி கிராம மாணவர்களை பாதுகாப்பாக எங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, தேர்வு எழுதிய பின்னர் மீண்டும் வீடுகளுக்கு கொண்டுவிடுவோம்” என்றார்.

SCROLL FOR NEXT