திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார். ஏப்ரல் 2-வது வாரத்தில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படு கிறது.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான நேர்காணலில் கலந்துகொள்ள அதிமுக நிர்வாகிளுக்கு நேற்று முன்தினம் திடீர் அழைப்பு வந்தது. அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனின் சொந்தத் தொகுதியில் இருந்து பாவை ரவிச்சந்திரன், தூசி மோகன், வழக்கறிஞர் சக்தி அண்ணாமலை ஆகியோரை அழைத்துள்ள தகவலால் அமைச்சர் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்திக்கு அழைப்பு இல்லை. கலசப்பாக்கம் தொகுதிக்கு திருநாவுக்கரசு, தென்மாதிமங்கலம் துரை உள்ளிட்டோர் அழைக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முக்கூர் என்.சுப்பிரமணியன், அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோ ருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள தகவல் உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து, அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை தொகுதியில் இருந்து நேர்காணலுக்கு யாரையும் அழைக்கவில்லை.
இதனால், ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் வீரமணி போட்டி யிடுவது கிட்டத்திட்ட உறுதியாகி விட்டது. குடியாத்தம் மற்றும் சோளிங்கர் தொகுதி கூட்டணி கட்சிக்கு கொடுக்க உள்ளதால் யாரையும் அழைக்கவில்லை.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை அழைத்துள்ளதால் முக்கூர் சுப்பிரமணியனுக்கும், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பரிந்துரை செய்தவர்கள்.
கலசப்பாக்கத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த துரைக்கு அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, எதிர்கால அரசியல் நலனைக் கருதி தனது தூரத்து உறவினரான முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனைக்கூட அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி பரிந்துரை செய்யவில்லை.