கரோனா காரணமாக சென்னையைத் தவிர அடுத்தகட்ட நகரங்களுக்கு ஐடி நிறுவனங்கள் செல்லதயாராக இருப்பதாகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துக்கான ஆலோசனைக் குழுவின் முதல் ஆய்வுக் கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து, அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துக்காகத் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அமைக்கப்பட்ட குழுவின் முதல்ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது, தமிழக ஐடி துறை வரலாற்றில் மைல்கல்லாகும். ஐடி துறையில் கரோனாவுக்குப் பின் ஏற்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார்போல் திட்டங்களை வகுப்பது தொடர்பாக, குழுவில் ஆலோசனை செய்யப்பட்டது.
கரோனா காலத்துக்குப் பின்னர், ஐடி நிறுவனங்கள் தற்போது சகஜமாக இயங்கத் தொடங்கியுள்ளன. அதேபோல, வீட்டிலிருந்து பணி செய்துவரும் ஐடி ஊழியர்களுக்கு மின் கட்டணம்உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து ஆலோசித்து வருகிறோம். அதேநேரத்தில், ஐடி நிறுவனங்கள் சென்னையைத் தவிர அடுத்தகட்ட நகரங்களுக்குச் செல்ல தயாராக இருக்கின்றன.
துறை சார்ந்த சிக்கல்கள் குறித்துநிறுவனங்களுடன் அரசு நீண்ட நாட்களுக்குப் பின்னர் தற்போதுதான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் அனைத்து சிக்கல்களையும் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் வர்த்தகம் செய்யும் சூழல், எளிய முறையில் அணுகக்கூடிய அரசு, திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்தே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில் பல வார்த்தக வாய்ப்புகளைத் தமிழகம் இழந்துள்ளது. ஆனால் தற்போது புதிதாக அமைந்துள்ள அரசு, நிறுவனங்களுடன் சுமுகமாக இருப்போம் என உறுதியளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.