தமிழகம்

கோவை தமிழக முதல்வரின் கோட்டை: அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம்

டி.ஜி.ரகுபதி

கோவையில் இன்று நடந்த அரசு விழாவில் பேசிய, அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை தமிழக முதல்வரின் கோட்டை என்று தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வஉசி மைதானத்தில் இன்று (22-ம் தேதி) நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசும்போது,‘‘ பத்து ஆண்டுகளாக காத்திருந்த தமிழகம், தனக்கான தலைவரை கண்டுள்ளது.

கோவையில் 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்களிடம் இருந்து 1.41 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்கு இவ்விழாவில் தீர்வு காணப்படுகிறது. கோவை நமது கோட்டை. கோவை தமிழக முதல்வரின் கோட்டை,’’ என்றார்.

பின்னர், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் பேசும்போது,‘‘ மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் சிந்தனையில் ஒற்றுமை கொண்டவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதனை, அனைவரும் இணைந்து, முதல் நாளிலேயே அமலாக்க வாக்குறுதி அளிக்கிறேன்,’’ என்றார்.

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது,‘‘ ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களோடு நெருக்கமாக இருந்து, அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக இணைந்து பணியாற்றினால், மக்கள் நலனில் இன்னும் வேகமாக பங்கு பெறலாம். இத்தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும்,’’ என்றார்.

தொண்டர்கள் வரவேற்பு

முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, திமுக தொண்டா்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து வஉசி மைதானம் வரை சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு நின்று, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா அரங்கத்தில் அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அதை முதல்வர் பார்வையிட்டார்.

இவ்விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு(பொதுப்பணித்துறை), தங்கம் தென்னரசு(தொழில்துறை) ,சு.முத்துசாமி(வீட்டுவசதி), மு.பெ.சாமிநாதன்(செய்தித்துறை), கா.ராமச்சந்திரன்(வனத்துறை), மா.சுப்பிரமணியன்(மருத்துவம்), கயல்விழி செல்வராஜ்(ஆதி திராவிடர் நலத்துறை), எம்.பிக்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், அந்தியூர் செல்வராஜ், கு.சண்முகசுந்தரம், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக்(மாநகர் கிழக்கு), சி.ஆர்.ராமச்சந்திரன்(மாவட்டம் வடக்கு), பையா என்ற ஆர்.கிருஷ்ணன்(மாநகர் மேற்கு), மருதமலை சேனாதிபதி(மாவட்டம் கிழக்கு), டாக்டர் வரதராஜன்(மாவட்டம் தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் படம் இல்லை

விழா மேடையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் படம் எதுவும் பதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி குறித்த விவரம் மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. கோவையில் 9 தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றால், அமர்வதற்காக அவர்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. விமான நிலையத்தில் இருந்து வஉசி மைதானத்துக்கு வரும் வழிகளில், வரவேற்பு பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT