பார்வையிடாத வெள்ள சேத விவரங்கள் எதுவும் விடுபடாது என்று கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழு தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து புகைப்படங்கள் வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து வடக்கு தாமரைக்குளம், பிள்ளைபெத்தான் அணைக்கட்டிற்குச் சென்ற குழுவினர் அங்கு உடைப்பு ஏற்பட்டு சேதமான பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் குமாரகோயிலில் சானல்கரை உடைப்பு, கால்வாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர். அதன் பின்னர் பேயன்குழிக்குச் சென்ற மத்தியக் குழுவினர் ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி பெருமளவு பாதிப்பு ஏற்படக் காரணமான இரட்டைகரை பாசனக் கால்வாய் உடைப்பு மற்றும் சேதங்களைப் பார்வையிட்டனர்.
மாலையில் வைக்கலூர் பகுதிக்குச் சென்ற மத்தியக் குழுவினர், மழை சேதம் ஏற்பட்ட 3 இடங்களைப் பார்வையிட்டனர். அங்கிருந்து நாகர்கோவில் சென்ற குழுவினர், ஒழுகினசேரி அப்டா சந்தை அருகே சேதமடைந்த நெல்வயல் பகுதிகளைப் பார்வையிட்டனர். பின்னர் தேரேக்கால்புதூர், திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் மழையால் துண்டிக்கப்பட்ட சாலை, மற்றும் சேதமான பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியக் குழுவினர் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து இங்கு வந்து ஆய்வு செய்துள்ளோம். தமிழகத்தில் முழு ஆய்வு செய்த விவரங்களை அறிக்கையாகத் தயார் செய்து மத்திய அரசிடம் வழங்கவுள்ளோம்.
குமரி மாவட்ட நிர்வாகம் மழை சேத விவரங்களைக் கொடுத்துள்ளது. அது தவிர தேவைப்படும் விவரங்களைக் கேட்டு வாங்கியுள்ளோம். சேதம் ஏற்பட்டவற்றில் பார்க்காத இடங்களை விட்டுவிட்டதாகச் சொல்ல முடியாது. அனைத்து சேதங்களுமே அறிக்கை விவரங்களில் வந்துவிட்டது. மழையால் மூழ்கிய வாழை மற்றும் விவசாய சேத மதிப்பீடும் கணக்கிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி.பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.