இந்தியாவில் 4 லட்சம் சித்தா மற்றும் ஆயுர்வேத மூலிகைகளுக்கு மத்திய அரசு காப்புரிமையைப் பெற்றுள்ளதாக டாக்டர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை தமிழ்நாடு ஹோட்டலில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் மூலம் பழங்குடியினர்களுக்கான மூலிகைத் தாவரப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பழங்குடியின மக்களுக்கு மூலிகைச் செடிகளைக் கண்டறியும் பயிற்சிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் கு.சிவராமன் கூறியதாவது:
"நீலகிரி மலைத்தொடரில் 6 பழங்குடியின மக்கள் உள்ளனர். அந்த மக்களிடம் சிறப்பான வாழ்வியலை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம். பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அவர்களின் உடல்நலன், கல்வி மேம்பட வேண்டும். அவர்களிடம் உள்ள நுட்பமான அனுபவக் கோர்வையை அறிவியல் கண்களோடு பார்க்க வேண்டும். மத்திய அரசு சித்தா, ஆயுர்வேதம், யூனானி, யோகா உட்பட பாரம்பரிய மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து, ஆயுஷ் துறையின் கீழ் கொண்டுவந்துள்ளது.
இந்த மருத்துவங்களில் ஆய்வுகள் நடத்தி, அவற்றின் பயனை உலகளாவிய அளவில் கொண்டு செல்கிறது. தமிழக அரசும் இந்திய மருத்துவத் துறையினர் கீழ் மரபு சார்ந்த மருத்துவங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வருகிறது. மூலிகைத் தாவரங்களை இனம் காணுவதிலும், பாதுகாப்பதிலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது.
மத்திய அரசு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சித்த மூலிகைகள் மற்றும் 3 லட்சம் ஆயுர்வேத மூலிகைகளுக்குக் காப்புரிமையை வாங்கியுள்ளது. பூர்வகுடி மக்களின் அனுபவமான விஷயங்கள் அவர்களின் அறிவு சார் சொத்துரிமை. பழங்குடியின மக்களின் அனுபவங்களைச் சொத்துரிமையாக்க இந்தக் கருத்தரங்கம் ஒரு தொடக்கம். இது அறிவியல் களமாக மாற்றப்படவுள்ளது.
பழங்குடியினரின் அனுபவங்களை அறிவு சொத்துரிமையாக மாற்ற பழங்குடியின ஆராய்ச்சி மையம் முயன்று வருகிறது. பழங்குடியின மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவர்களின் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த கட்டமைப்புகள் தேவை. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டக்குழு மூலம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது."
இவ்வாறு டாக்டர் கு.சிவராமன் தெரிவித்தார்.