வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செவ்வனே செய்யும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் நலிவடைந்தோர் தின விழா இன்று (நவ.22) நடைபெற்றது.
நெடுங்காடு அருகேயுள்ள குரும்பகரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசும்போது, ’’கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தற்போதைய அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா மாற்றம், விடுபட்டவர்களுக்குப் பட்டா வழங்குதல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள விடுபட்டவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்குதல் போன்ற முக்கியத் திட்டங்களைச் சிறப்பு முகாம்கள் அமைத்து, மக்களைத் தேடி வந்து இந்த அரசு செய்யும். அடையாள அட்டைகள் பெறாத அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் இந்த அரசு செவ்வனே செய்யும்'' என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார்.
கலப்புத் திருமணம் செய்துகொண்டோர், பாலூட்டும் தாய்மார்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவி இயக்குநர் காஞ்சனா, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.