தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் காவல்துறையில் காலியாக உள்ள 19,157 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தேர்தல் முடிந்த கையோடு தமிழக காவல்துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள 19,157 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழக காவல்துறையில் மொத்தம் 19 ஆயிரத்து 157 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெற்றுள்ளேன். போதுமான எண்ணிக்கையில் போலீஸாரை நியமிக்க தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நீதிமன்றங்களுக்கென தனியாக சிறப்பு காவல் நிலையங்களை உருவாக்கினால், வழக்குகளின் தேக்கத்தையும் வெகுவாக குறைக்க முடியும். எனவே காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இப்போது இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்காக இந்த பிரச்சினையை அப்படியே தவிர்த்துவிட முடியாது. மாநிலம் முழுவதும் காவல்துறையில் அதிகப்படியான எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், நீதிமன்றங்களுக்கென தனியாக காவல் நிலையங்கள் அமைக்கவேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கடந்த 12.1.16 அன்று மனு கொடுத்துள்ளார். எனவே மனுதாரர் கொடுத்துள்ள அந்தக் கோரிக்கை மனுவை அதிகாரிகள் வரும் 15.6.16 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். காவல்துறையில் ஏற்பட்டுள்ள இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்தல் முடிந்த கையோடு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT