வேன் மோதி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த நிலையில், அவரின் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆபத்தான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
''கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் மோதியது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல் அதிகாரி பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. ஆபத்தான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.