தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பண்டாரி பதவியேற்பு 

டி.செல்வகுமார்

சென்னை உயர் நீதிமன்றப் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்றார். அவருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மலர்க்கொத்தும், நினைவுப் பரிசும் வழங்கி வாழ்த்தினார். விழாவில், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி, மூத்த வழக்கறிஞர்கள், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT