தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 10-வது கட்ட மெகா முகாமில்18.21 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் வாரம்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 75 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 36 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி போடுவதற்காக வாரம்தோறும் வியாழன்,ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நேற்று 10-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.
சுகாதாரம், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாம்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவகாசம் முடிந்தும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 71 லட்சம் பேருக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டார். துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடன் சென்றனர்.
இந்த 10-ம் கட்ட மெகா முகாமில் 18.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாம் பணிகளில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதால், வழக்கமாக செயல்படும் தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.